Abstract:
ஜனநாயக முறைமையில் சட்வாட்சிக் கோட்பாடானது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 
அதாவது ஒருநாட்டில் ஆட்சிமுறையானது சட்டத்தின் அடிப்படையிலேயே 
மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை இது வலியுறுத்துகின்றது. அத்துடன் 
அந்நாட்டிலுள்ள ஆட்சியாளர்களும், பிரஜைகளும் அங்குள்ள சட்டங்களுக்கு 
ஒத்தமுறையில் கட்டுப்படுதல் வேண்டும் என்பதை இது வலியுறுத்துகின்றது. 
இலங்கையில் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஆட்சிமாற்றம் 
தொடர்பாக நிறைவேற்றுத்துறைக்குத் தலைவரான ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட சில 
தீர்மானங்கள் சட்டவாட்சிக் கோட்பாட்டினை சவாலுக்குட்படுத்தியிருந்தன. இதனால் 
நாட்டில் ஓர் அரசியல் நெருக்கடி நிலை உருவாகியிருந்தது. ஜனாதிபதி நாட்டின் 
அடிப்படைச் சட்டமாக விளங்குகின்ற அரசியலமைப்பிலுள்ள சில சரத்துக்களை மீறி 
ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தியதன் காரணமாக இவ்நெருக்கடி நிலை 
உருவாகியிருந்தது. இவ்நெருக்கடி நிலமையினால் சட்டத்துறையின் உயர் சபையான 
பாராளுமன்றத்தில் பெரும் கலவரநிலை உருவாகியிருந்ததுடன் நாட்டிலும் அரசாங்கம் 
பற்றிய குழப்பநிலை நிலவியது. இதனால் நல்லாட்சிமுறை அச்சுறுத்தலுக்குள்ளாகி, 
ஜனநாயகம் சவாலுக்குட்படுத்தப்பட்டமையினை ஆய்வுப்பிரச்சினையாகக் கொண்டு 
சட்டவாட்சி பற்றிய தெளிவினைப் பெற்றுக்கொள்வதுடன் ஜனாதிபதி அரசியலமைப்பின் 
சில ஏற்பாடுகளை மீறியுள்ளமையினை கண்டறிவதனையும் நோக்கமாகக் கொண்டு 
இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தவகையில் இவ் ஆய்வானது முதலாம், 
இரண்டாம் நிலைத் தரவுகளைப் பயன்படுத்தி பண்புரீதியான ஆய்வுமுறையியல் 
அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி அரசியலமைப்பின் 
எவ்வேற்பாடுகளை மீறியுள்ளார் என்பதையும் அதன்மூலம் சட்டவாட்சி எவ்வாறு 
சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் இவ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 
அத்துடன் சட்டவாட்சியைப் பாதுகாப்பதற்கான பல பரிந்துரைகளும் இங்கு 
முன்வைக்கப்படுகின்றன.