Abstract:
ஆண், பெண் இருபாலாரும் தமது வாழ்க்கைத் துணையை சரியாகத் தெரிவு செய்து கொள்வதில் இல்லற வாழ்வின் வெற்றியும், மகிழ்ச்சியும் தங்கியுள்ளது. திருமணத்திற்கான அவர்களது தெரிவில் தவறுகள் விடப்படுகின்றபோது அது அவர்களது வாழ்வில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும். மணவாழ்வில் புரிந்துணர்வின்மை ஏற்பட்டு விவாகரத்துக் கூட ஏற்படலாம். எனினும் தம்பதியர் இருவரும் தத்தமதுகடமைகளை உணர்ந்து சரிவர நிறைவேற்றும் போது அவர்களது குடும்ப வாழ்வு செழிக்கவும், சிறந்த சந்ததிகள் உருவாகவும் வழி ஏற்படுகின்றது. எனவே ஒரு ஆண் தனக்குறிய துணையைத் தெரிவு செய்யும் போது மகிழ்ச்சியான, இல் வாழ்க்கைக்குப் பொருத்தமான பண்புகளைத் தன்னகத்தே கொண்ட பெண்ணைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும்என மதவழிகாட்டுதல்கள் முலம் அறிவுறுத்தப்படுகின்றான். ஓர் ஆணோ, பெண்ணோ தனக்குரிய துணையைத் தெரிவு செய்யும் போது நடைமுறையில் கவனத்தில் கொள்ளும் பல அம்சங்கள் காணப்படுகின்றன. அவை பணம், பதவி, குலம், கோத்திரம் , அழகு போன்றவைகளாகும். நல்ல மனைவிக்குரிய இலக்கணம், பண்புகளை பல இலக்கியங்கள் எடுத்தியம்பினாலும் திருக்குறள் மற்றும் இஸ்லாத்தினுடைய வழிகாட்டல்களை ஆராயுமிடத்து அவைகளில் பல ஒற்றுமைத் தன்மைகளை அவதானிக்கலாம். ஒரு நல்ல மனைவி எத்தகைய னுணவியல்புகளை அணிகலனாகக் கொண்டிருக்க வேண்டும் என திருக்குறள் மற்றும் இஸ்லாத்தினுடைய வழிகாட்டலிலுள்ள ஒற்றுமையை வெளிக்கொணர்வதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். இவ்வாய்வுக்காக திருக்குறளும் அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களும் முதன்மைத்தரவுகளாகப் பயன்னடுத்தப்பட்டுள்ளதோடு விவரணப்பகுப்பாய்வு முறை பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஒப்பியல் நோக்கில் திருக்குறள் மற்றும் அல்குர்ஆனைத ஆய்வு செய்பவர்களுக்கும் மனைவியின் அணிகலன்களை அறிந்து கொள்ள எத்தணிப்பவர்களுக்கும் சமயப் போதனைகளுக்கு அமைவாக திருமணத்திற்காக எவ்வாறான பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என முயற்சிப்பவர்களுக்கும் இவ்வாய்வு வழிகாட்டியாக அமையும்.